search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் பணியிட மாறுதல்"

    ஆசிரியர் பணியிட மாறுதலில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் கொத்துக்கொத்தாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தமிழக அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள் சமூக நீதிக்கு எதிரானவை; கண்டிக்கத்தக்கவையும் ஆகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 400-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நிர்வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 175 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அரசு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளாக மாற்றி வருகிறது.

    வடமாவட்டங்களில் நிலவும் பின்தங்கிய நிலைமை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களாக தேர்வாகவில்லை. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பின் தங்கிய பகுதிகளில் பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

    இந்த மாவட்டங்களில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் என்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாறுதல்களுக்கு கையூட்டாக எத்தனை கோடி வசூலிக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

    ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பொது மாறுதல் செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். அவ்வாறு செய்யப்படும் போது காலியிடங்களுக்கு மட்டும் தான் ஆசிரியர்களை மாற்ற முடியும். பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடியாது.

    இடையில் சில காலம் ஓய்ந்திருந்த நிர்வாக மாறுதல் ஊழல் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இம்மாதத் தொடக்கத்தில் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக தனிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

    அத்தகைய கொள்கையை உருவாக்க வேண்டிய அரசு, அதற்கு முன்பே ஆசிரியர்களை மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, வட மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் பகவானை, கட்டிப்பிடித்து “போகாதீங்க சார்” என மாணவ- மாணவிகள் கதறி அழுத சம்பவம் ஊடகங்களில் வெளியான நிலையில், அவரது பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    ஒரு பள்ளியை சீர்படுத்தி மாணவர்கள் மனதில் இடம் பிடித்த பிறகு மாறுதலாகி செல்லும் ஆசிரியரான சமுத்திரக்கனியை சுற்றி சூழ்ந்து ‘சார் போகாதீங்க சார்’ என்று உணர்ச்சி பொங்க அழுவார்கள். அது படம்.

    நிஜமாகவே அந்த ‘சாட்டையை’ மிஞ்சும் வகையில் ஒரு ஆசிரியருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே நடந்த பாசப் போராட்டம் பார்த்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர்.

    ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒரு காலம். ஆனால் இந்த காலத்தில் ஆசிரியர்- மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது.

    ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆசிரியர் பகவான்.

    அவர் எப்படி பாடம் நடத்தி இருப்பார்? மாணவர்களிடம் எப்படி பழகி இருப்பார்? மாணவர்கள் எப்படி நேசித்து இருக்கிறார்கள் என்பதற்கு பள்ளியில் அரங்கேறிய பாசப் போராட்டமே சாட்சி.

    5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.


    பகவான், இடமாறுதல் ஆகி இருப்பதை அறிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மிகச்சிறந்த ஆசிரியர், அவர் மாறுதலாகி செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூடத்துக்கே பூட்டு போட்டு போராடினார்கள்.

    இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக ஆசிரியர் பகவான் பள்ளிக்கு வந்தார்.

    உடனே மாணவ- மாணவிகள் வகுப்பறைகளை விட்டு வெளியே ஒடிவந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு ‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’ என்று மொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

    அவர்களை பகவான் சமாதானம் படுத்தினார். ஆனால் மாணவர்களால் அவரது பிரிவை தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறினார்கள்.

    சிலர் அவரது கால்களை கட்டிப்பிடித்தப்படி, ‘சார், போகாதீங்க சார்’ என்று அழுதனர். மாணவர்களின் கண்ணீர் கடலில் மிதந்த ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். ஒவ்வொரு மாணவர்களின் தோளிலும் தட்டிக்கொடுத்து அழாதீங்க என்று ஆறுதல் படுத்தினார்.

    கூட்டத்தில் இருந்து பகவான் வெளியே நடக்க தொடங்கியதும் மாணவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். ஒடிச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடி அழுதனர்.


    சார்... ப்ளீஸ் சார் போகாதீங்க சார்... என்று கண்ணீர் விட்ட அவர்களின் அழுகையை அடக்க முடியவில்லை.

    ‘எங்க பகவான் சார் எங்களுக்கு வேணும்! அவர் வரலைன்னா டி.சி.யை வாங்கிட்டு வேறு பள்ளிக்கு போயிடுவேன்’ இப்படி ஆளாளுக்கு தேம்பி தேம்பி அழுதபடியே கூறினார்கள்.

    வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

    எனினும், மாணவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த பாசப் போராட்டம் ஊடகங்களில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது. இதனை அடுத்து, அவரது பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Tamilnews
    ×